மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் ஓரங்கட்டப்படுவார்கள் என்று வவுனியா மீள் குடியேறியோர் நலன் பேணும் அமைப்பின் தலைவர் மா.ரெனிதாஸ் தெரிவித்தார்
வவுனியா மீள் குடியேறியோர் நலன் பேணும் அமைப்பின் தலைவர் மா.ரெனிதாஸ் எமது செய்திச்சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்திலுள்ள கிராமங்களில் குறைபாடுகளை இனங்கண்டு அதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். வவுனியா மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்ததன் பின் சில கிராமங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் மலசல கூடம் இல்லாத நிலையில் கூட வாழ்ந்து வருவதனை காணக்கூடியதாக இருக்கிறது.
தேர்தல் காலங்களில் மாத்திரம் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகளை வழங்கி ஆசனங்களை கைப்பற்றிய பின்னர் மக்களை கண்டுகொள்வதில்லை. கடந்த கால யுத்தத்தின் காரணமாக மக்கள் பயந்த நிலையிலேயே காணப்படுகிறார்கள். பெரும்பாலான கிராமங்களில் லஞ்சம், பாலியல் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம், இளைஞர்களின் மதுபோதை பாவனைகள், அரச அதிகாரிகளின் மக்கள் புறக்கணிப்பு தன்மைகள் எமது மாவட்டத்திலே மலிந்து காணப்படுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் அவர்களை மக்கள் சந்திக்க முடியாத நிலமையே காணப்படுகிறது. இவ்வாறாக மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் ஓரங்கட்டப்படுவார்கள் என சுட்டிக்காட்டினார். யுத்தம் முடிந்திருக்கிறது ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பால் கணவர்களை இழந்த பெண்கள் மற்றும் அனாதை சிறுவர்களுக்கு எந்தவிதமான திட்டங்களும் தயாரிக்கப்படவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பில்உள்ள கட்சிகள் தங்களை வளர்த்துக்கொள்ளும் இலக்குடன் மாத்திரமே செயல்ப்படுகிறது மக்கள் நலனில் எந்தவிதமான அக்கறையும் செலுத்துவதில்லை என குற்றஞ்சாட்டினார்