வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நேற்றைய தினம் மட்டும் 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களிடம் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நோயாளர் விடுதியில் கடமையாற்றும் இரு தாதியருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்றைய தினம் (27.03) மதியம் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனை என்பவற்றில் மேலும் இரு வவுனியா வைத்தியசாலை தாதியருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த இளைஞருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்றைய தினம் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியாவில் நேற்று நான்கு தாதியர்கள் உட்பட 6 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளைச் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.