யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவிடம் அகற்றப்பட்டமை குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு, யுத்தகாலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தரப்பினரால் நினைவிடம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டம் கட்டமாகவே இந்த நினைவிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு மற்றும் வடக்கிற்கு இடையில் நல்லிணக்கத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியது. யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் ஶ்ரீசற்குணராஜா தற்போதைய காலத்தில் மிகவும் திறமையான ஒருவர் என்பதுடன் சிறந்த நிர்வாகியுமாவார். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் கண்ட சிறந்த உபவேந்தராகவும் அவரை கூறமுடியும். அவ்வாறான ஒருவர் எதிர்காலத்திற்கு பாதகத்தை ஏற்படுத்த கூடிய ஒரு விடயமாக இதனைக் கண்டு அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய நிலையில் யுத்த நினைவுகளை விட நாட்டில் இளம் சமுதாயத்திற்கு இடையிலான ஒற்றுமையும் சமாதானமுமே அவசியமாகும் எனவும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தற்போது கல்விகற்கும் மாணவர்கள் யுத்தம் நிறைவடைந்த காலத்தில் 9, 10 மற்றும் 11 வயதுகளை உடையவர்கள். அது தமிழ் சிங்களம் முஸ்லிம் என எந்த இனத்தை சேர்ந்தாலும் அவர்கள் எமது பிள்ளைகள். தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் 1500க்கும் மேற்ப்பட்ட சிங்கள மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதனையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். அதேபோன்று தெற்கில் உள்ள பல்கலைகழகங்களில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதிலே தற்போதுவரையில் மாணவர்களிடையே பிரச்சினைகள் இல்லை. எதிர்காலத்தில் இந்த நிலையை கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு இடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏ ற்படுத்த வேண்டும். அவர்கள் பொது தங்குமிடங்களிலே இருக்கின்றனர், பொது பரீட்சைக்கே பங்கேற்கின்றனர். அதிலே எந்த பிரச்சினையும் ஏற்படாது மாணவர்களே பார்த்துக்கொள்கின்றார்கள். நாடு என்ற ரிதியில் நாம் அதிஸ்டசாலிகளே. ஆகவே இதனை அடிப்படையாக கொண்டே குறித்த நினைவிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது. இது காலத்துக்கு பொருத்தமானது ஒன்று. தற்போதைய நிலையில் யுத்த நினைவுகளை விட நாட்டில் இளம் சமுதாயத்திற்கு இடையிலான ஒற்றுமையும் சமாதானமுமே அவசியமாகும். எமது பிள்ளைகளுக்காக நாம் அதற்காக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடமானது நேற்று இரவு அகற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நினைவிடமொன்றே இவ்வாறு அகற்றப்பட்டது.
அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியின் கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு முன்னைய அரசாங்க காலப்பகுதியில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதுடன், நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த நினைவிடத்தை அகற்றும் நடவடிக்கை பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முன்னெடுக்கபட்டதாக உபவேந்தர் சிவகொழுந்து ஶ்ரீசற்குணராஜா குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.