அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கலக்கிய நடராஜனுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்க அவருடைய திறமையே காரணம். இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருந்தன.
குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு பதிலாக, மற்றொரு வேகப்பந்து வீச்சாளரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பையும் நடராஜன் சரியாக பயன்படுத்தி அற்புதமாக பந்து வீசி 10 ஓவரில் ஒரு மெய்டன் 70 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். முதல் போட்டியிலேயே முதல் விக்கெட்டை வீழ்த்திய தமிழ் மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்.
இந்திய அணியில் இடம் கிடைக்க போராடி வந்த நடராஜனுக்கு உண்மையில் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று பார்த்தால், அதற்கு முக்கிய காரணம் அவரது இடது கை பந்து வீச்சு. ஏனெனில், இந்திய அணியில் மற்ற இரண்டு இடது கை வேகப்பந்து வீச்சாளர்களும் நடராஜனை போல் எப்போதும் துல்லியமாக யார்க்கர் வீசியதில்லை. உடனடியாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவனத்தை தன் பக்கம் நடராஜன் திருப்பினார். முதல்தர போட்டிகளில் பெரிதாக ஆடாமல் தனது திறமையை மூலம் நேரடியாக இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். முதன் முதலாக அவருக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசும் பந்துவீச்சாளராக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் டி20 அணியில் இடம் பெற்றிருந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக உடனடியாக தங்கராசு நடராஜனுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டு 20 அணியில் இணைந்தார். தொடர்ந்து அவரது திறமையை தெரிந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உடனடியாக அவரை ஒரு நாள் போட்டிகளிலும் சேர்த்தார். அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் 2 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை. இதனால் கோஹ்லி கடும் விமர்சனத்தை சந்தித்தார். ஏனெனில், கடந்த இரண்டு போட்டிகளில் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, முதலிரண்டு போட்டிகளில் அந்தளவிற்கு ஆடவில்லை, இதனால் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதே போன்று கோஹ்லியின் பார்வையும், நடராஜனின் பக்கம் திரும்பியது. நடராஜனின் கனவு நினைவானது. இதனை வைத்துதான் நடராஜனுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை தாண்டி தற்போது ஜஸ்பிரித் பும்ரா விற்கு அடுத்ததாக துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசும் இந்தியாவின் ஒரே வீரர் நடராஜன் தான். இதனை எல்லாம் வைத்து தான் அவருக்கு இந்திய அணியில் தற்போது வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.