கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசிக்கான பரிசோதனையில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த தமிழருக்கு தலைவலி, உடல் அயற்சி, குடும்பத்தாரை கண்டறிய இயலாமை போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் 5 கோடி இழப்பீடு கேட்டுள்ளார்.
ராமச்சந்திரா பல்கலைகழகத்தில் தடுப்பூசி எவ்வளவு பலனளிக்கக் கூடும் என சோதிக்கப்பட்டது. சோதனையின் போது ஒரு பிரிவினருக்கு உண்மையான தடுப்பூசியும் மற்றொரு பிரிவினருக்கு பாதிப்பு இல்லாத மற்றொரு மருந்தும் வழங்கப்படும். யாருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது, யாருக்கு வேறு மருந்து வழங்கப்பட்டது என சோதனையில் பங்கேற்கும் யாருக்கும் தெரியாது. சோதனையின் முடிவில் அனைவரையும் சோதித்து பார்த்தால் மட்டுமே தடுப்பூசி என்ன விளைவுகளை யாருக்கு ஏற்படுத்தியுள்ளது என தெரியும்.
சென்னையை சேர்ந்த 40 வயது ஆணுக்கு சோதித்து பார்த்ததில் அவருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. எனவே சோதனையின்போது அவருக்கு கொடுக்கப்பட்டது தடுப்பு மருந்து தான் என்பது உறுதியாகியுள்ளது.அக்டோபர் 1ம் திகதி அவருக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. அதனால் அவருக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாக ரூ.5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தடுப்பு மருந்து கொடுத்து பத்து நாட்களில் அவருக்கு உடல் நலம் பாதிப்படைய ஆரம்பித்ததாக நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. தலைவலி, உடல் அயற்சி, குடும்பத்தாரை கண்டறிய இயலாமை, அடிக்கடி கோவப்படுவது என பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே இழப்பீடாக தனக்கு 5 கோடி ரூபாய் வழங்குவதோடு இந்த சோதனையை உடனே நிறுத்துமாறும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், காய்ச்சல், தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வாந்தி, தலைவலி போன்ற லேசான பிரச்னைகள் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி கோமா நிலையில் நினைவிழந்து இருப்பேன் என தெரிவிக்கவில்லை. பாதுகாப்பு தான் முதலில் முக்கியம், வேறு யாருக்கும் இதுபோல ஆகக்கூடாது என கூறியுள்ளார்.