அரச சார்பு தமிழ் உறுப்பினர்களை வசைபாடும் கூட்டமைப்பினர் தம்மை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
தமிழர்கள் மத்தியில் படிப்படியாக தமது செல்வாக்கை இழந்துவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அன்மைக்கால நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் மீதான வெறுப்புணர்வை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைக்காக போராடப்போகின்றோம் என தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கூட்டமைப்பின் உறுப்பினர்களது தற்கால பாராளுமன்ற பேச்சுக்கள் தங்களின் காழ்ப்புணர்ச்சிகளை கொட்டித் தீர்பதாகவும் , ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வசைபாடுவதாகவுமே அமைந்துள்ளதுடன் சிலர் நமது பன்மொழி அறிதலை வெளிக்காட்டும் இடமாக பாராளுமன்றத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க சார்பான கட்சிகளில் போட்டியிட்டு நம்மைவிட அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திடம் காட்டிக்கொடுத்து அவர்கள் மீது மிகைப்படுத்தப்பட்ட அவதூறுகளை பரப்பி அவர்கள் மூலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் கிடைக்கப்போகும் அபிவிருத்திகளையும் வேலைவாய்ப்புக்களையும் தடுத்து நிறுத்தி மக்களை தொடர்ந்தும் வஞ்சிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.
வெறும் உணர்ச்சி வசனங்களை பேசி தொடர்ந்தும் மக்களை ஏமாற்றாது தமிழ் மக்களால் அதிகம் விரும்பப்படாத அரசசார்பு கட்சிகளில் நேரடியாக போட்டியிட்டு மக்களின் வாக்குகளை பெற்று வெற்றிபெற்று கிழக்கு மாகாண மக்களுக்கு துரித அபிவிருத்திகளை மேற்கொள்ள துடிக்கும் வியாழேந்திரன் போன்றவர்கள் மீது சேறு பூசி அவர்கள் மீது அரசாங்கம் வைத்திருக்கும் நன்மதிப்பை இல்லாமல் செய்து அவர்களூடாக தமிழ் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை கெடுத்து தொடர்ந்தும் தமிழ்மக்களை தமது தேவைகளுக்காக மாற்று சமூகத்திடம் கையேந்த வைக்கும் இரகசிய நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பினர் தமது இந்த குரோத புத்தியை கைவிட்டு உங்களுக்கு வாக்களித்த மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதில் ஒரு துளியையேனும் நிறைவேற்ற முயற்சி செய்வது ஆரோக்கியமாக அமையும் .
கூட்டமைப்பின் கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பெரும்பான்மையினத்தினருடன் இருக்கும் நெருங்கிய உறவினாலும் தமக்கு தமது பெற்றோர் அமைத்துக்கொடுத்த கல்விச் சூழலினாலும் மூன்று மொழிகளையும் அறிந்துகொண்டு அது பேசுவதால் தாம் பெரும் ஆளுமை மிக்கவர்களாக தம்மைத்தாமே உருவகித்துக்கொண்டு மக்களுடன் மக்களாக வாழ்ந்து மக்களின் வலிகளையும் பணியையும் புரிந்துகொண்டு மக்களுக்கான உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உழைத்துக்கொண்டிருக்கும் அரச சார்பு உறுப்பினர்களை மட்டம் தட்டும் வகையில் பேசுவதை ரசிக்க முடியவில்லை என்பதோடு பன்மொழி அறிதல் என்பது ஒரு அறிவாகவோ ஆளுமையாகவோ கருத முடியாது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்தல் காலத்தில் தேசிய கட்சிகளில் போட்டியிட்டவர்களை துரோகிகள் என தூற்றி தமிழ்மக்கள் மத்தியில் அவர்களை பிழையானவர்களாக காண்பித்து பிரச்சாரங்களை மேற்கொண்டு பயனற்று போனமையால் கூட்டமைப்பின் போலிப் பிரச்சாரங்களை முறியடித்து வரலாற்று வெற்றியை பெற்ற இராஜங்க அமைச்சர் கௌரவ வியாழேந்திரன் போன்றவர்களுக்கு எதிராக தற்போது பாராளுமன்றத்தில் போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை பழிதீர்க முயன்று வருகின்றனர்.
தமக்கு பாராளுமன்றத்தில் வழங்கப்படும் நேரத்தை தமிழ் மக்களுக்காக பயன்படுத்தாமல் மற்றவர்களை குறைகூறி அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்து வருவது இவர்களை போன்றவர்களால் மக்களுக்கு பணி செய்பவர்களை தடுக்க முடியுமே அன்றி ஆக்கபூர்வமாக செயற்பட முடியாது என்பதனை மீண்டும் நிருபித்துள்ளது.
எனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்களும் தங்களது கட்சியும் கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு கண்மூடித்தனமாக கைகளை உயர்த்தி எவற்றை சாதித்தீர்கள் என்பதனை ஒருமுறை சுய பரிசோதனை செய்துவிட்டு பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள் நீங்கள் தொடர்ந்தும் இவ்வாறான போக்கையே கடைப்பிடிப்பீர்களேயானால் அடுத்துவரும் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவர்.
நன்றி.
ப.உதயராசா
செயலாளர் நாயகம்
சிறி தமிழீழ விடுதலை இயக்கம்