வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் மாலை, இரவு வேளைகளில் இளைஞர்கள் அட்டகாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள நிலையில் தனியார் கல்வி நிலைய விளம்பர பலகைகளும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
வவுனியா, வைரவ புளியங்குளம் கதிரேசு வீதி மற்றும் வைரவர் கோவில் வீதி என்பன தனியார் கல்வி நிலையங்களைக் கொண்ட பகுதியாகும்.
மாலை வேளைகளில் இப்பகுதியில் ஒன்று கூடும் இளைஞர்கள், அங்கு கல்வி பயில வரும் மாணவிகளுடன் சேட்டை புரிவதுடன் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்களுடனும் அடிக்கடி கைகலப்பில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இந்நிலையில் வைரவ புளியங்குளம், வைரவர் கோவில் வீதி மற்றும் இராசதுரை வீதி என்பவற்றில் உள்ள கல்வி நிலையங்கள் இரண்டினது விளம்பரப் பலகைகள் மீது செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர்கள் தாக்குதல் நடத்தி உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இப்பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம் தொடர்வதாகவும் பொலிசாரின் ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.