சாரதியின் கவனயீனத்தினால் வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்தில் காயமடைந்த இளைஞர்களில் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்
வவுனியா ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த இளைஞர்களை கவனத்தில் கொள்ளாது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று தரிப்பிடத்திற்குள் வேகமாக திரும்பியுள்ளது. இதன்போது மோட்டார்சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும், பேருந்தின் பின் பகுதியில் மோதி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
இதன் பின்னர் இ.போ.ச சாரதியும், நடத்துனரும் படுகாயமடைந்த இளைஞர்கள் மீது குற்றம்சாட்டியவாறு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்
எனினும் குறித்த பகுதியில் நடந்து சென்ற வயோதிபரொருவர் சம்பவத்தினை தான் நேரடியாக கண்டதாகவும், பேருந்து செலுத்தப்பட்ட விதமே பிழையானது எனவும் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், பேருந்தினையும் சேதத்திற்குள்ளான மோட்டார் சைக்கிளினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றிருந்தனர்