மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட கதிரவெளி பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று நேற்று ஞாயிறு மாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கதிரவெளி நாவலர் வீதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணமான இளம் குடும்பஸ்தரான கிருபைரெட்ணம் நிரோஜன் (19) என்ற நபர் தாமரைக் காய் பறிப்பதற்காக குளத்தில் இறங்கியுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் மூன்று மணியளவில் தான் வீட்டை விட்டு குறித்த குளத்தடியில் வந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
வீட்டை விட்டு வந்த கணவரைக் காணவில்லை என தேடிய மனைவி நேற்று மாலை சுமார் ஐந்து மணியளவில் குளத்தடிப் பக்கமும் சென்று தேடிய நிலையில் கணவர் கிடைக்கவில்லை.
பின்னர் இன்று காலை உறவினர்களுடன் குளத்தடியில் வந்து தேடிய போது அவர் அணிந்திருந்த செருப்பு மற்றும் பை என்பன கிடைந்துள்ளதை அவதானித்துள்ளனர்.
அதனையடுத்து குளத்துக்குள் இறங்கி தேடிய போது உயிரிழந்த நிலையிலுள்ள சடலத்தை மீட்டு அடையாளம் கண்டதும், வாகரை பொலிசாருக்கு தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த குளத்தில் அதிகமான தாமரைகள் இருந்துள்ள நிலையில் அதிலுள்ள காயை பறிப்பதற்காக குளத்தில் இறங்கும் போது குளத்தில் நீர் மற்றும் சேறு நிரம்பி இருந்தமையினால் காய் பறிக்கும் போது சேற்றுக்குள் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்