ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணர்களது திருகோணமலை சித்திரவதை முகாமிற்கான விஜயமும், அது தொடர்பான அவர்களது அவதானிப்புக்களையும் காணாமல்போனோர் விவகாரத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சித்திரவதைகளுக்கு எதிரான மற்றும் இறைமைசார் கொள்கைகளின் பணிப்பாளர் சோனியா சீட்ஸ் (Sonya Sceats) ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரித்தானியாவை மையமாகக்கொண்டு செயற்படும் சித்திரவதைகளுக்கு எதிரான மற்றும் இறைமைசார் கொள்கைகளின் (Freedom for Torture) பணிப்பாளர் சோனியா சீட்ஸ் (Sonya Sceats) செய்திகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வழங்கிய செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்குவந்த பின்னரும் சித்திரவதைகள் தொடர்பாக 8 புதிய முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தெரிவித்த அவர், அங்கு சித்திரவதைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டார்.
அந்த செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்னரும் சித்திரவதைகள் தொடர்பில் ஸ்ரீலங்காவிலிருந்து 8 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் குறித்த 8 பேரையும் தடுத்து வைத்தும், சித்திரவதை செய்திருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அபாயகரமான மற்றும் சூடேற்றப்பட்ட உலோகக் கம்பிகளைப் பயன்படுத்தி இந்த சித்திரவதைகள் இடம்பெற்றிருப்பதாகவும், பாலியல் சித்திரவதைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதிலிருந்து உயிர்தப்பியவர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்.
சுகாதார பயிற்சியாளர்கள், மனநல நிபுணர்கள் உட்பட தேசிய சுகாதார அல்லது வழக்கறிஞர்கள் ஆகியோரால் தங்களுக்கு வழங்கப்பட்ட காயங்கள் தடயவியல் ஆவணங்களை வைத்து குறித்த 8 பேரும் பிரித்தானியாவிற்கு வந்து புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில் இவர்களில் ஒருவருக்கு பிரித்தானிய அரசாங்கம் பாதுகாப்பு அளித்து வருகின்றது.
இவ்வாறான சம்பவங்களைப் பார்க்கும்போது மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் செயற்பாடுகளின் தொடர்ச்சியை புதிய அரசாங்கமும் பின்பற்றுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இவ்வாறான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவருவது புதிய அரசாங்கத்தின் கடமையாகும்.
அதேவேளை அண்மையில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணர்கள் குழு திருகோணமலைக்குச் சென்று சித்திரவதை முகாம் பகுதிக்கும் சென்று ஆய்வுகளை நடத்தியிருந்தது. அதன் பின்னர் அவர்கள் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா மீதான அவதானிப்புக்களை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த ஐ.நா நிபுணர் குழுவினது விஜயத்தையும், அவதானிப்புக்களையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வு வழங்க வேண்டும்.
ஸ்ரீலங்காவில் சில சித்திரவதை முகாம்கள் இன்னும் செயற்பட்டே வருகின்றன. வவுனியாவில் இராணுவத்தினரால் ஜோசப் முகாம் என்ற பெயரில் சித்திரவதை முகாமின் செயற்பாடு தொடர்கின்றது.
அதேபோல கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 4ஆவது மாடியிலும் தொடர்ச்சியாக சித்திரவதைகள் அரங்கேறியே வருகின்றன – என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை காணாமல்போனோர் ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.