ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு முறை தான் ஆச்சரியமடைந்த சந்தர்ப்பங்கள் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் அம்பலாங்கொட தொகுதி சம்மேளன கூட்டம், அம்பலாங்கொட தர்மாசோகா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் மாத்திரமல்லாது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சர்கள் சிலர் தன்னிடம் கோரிய நாளிலும் தான் இவ்வாறு ஆச்சரியமடைந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ள இடமளிக்கப்படுவதில்லை என்ற போதிலும் தமது வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சில உள்ளூராட்சி சபைகளின் தலைவர் செய்த பாரதூரமான தவறுகள் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலுவிழந்து காணப்பட்டது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முன்னர் சிறந்த கட்சியை உருவாக்க வேண்டும் எனவும் இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.