கிழக்கு மாகாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட அஞ்சல் மற்றும் அஞ்சல் விவகார முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு அருகாமையில் நேற்று 23 சனிக்கிழமை இடம்பெற்ற இவ் வருடத்திற்கான பேரீச்சம் பழங்கள் அறுவடை நிகழ்வில் கலந்து கொண்டார்.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பேரீச்சம் பழங்களை அறுவடை செய்யும் நிகழ்வில் அஞ்சல் மற்றும் அஞ்சல் விவகார முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வருடத்திற்கான பேரீச்சம் பழங்களை பேரீச்ச மரங்களில் இருந்து அறுவடை செய்தார்.
கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் விஷேட திட்டத்திற்கமைவாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக மத்திய கிழக்கு நாடுகள் போன்று மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே 70 பேரீச்ச மரங்கள் நடப்பட்டு, காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமான மரங்களில் அதிகமான பேரீச்சைப் பழங்களை அறுவடை செய்ய முடிந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீச்ச மரங்களிலுள்ள பேரீச்சம்; பழங்கள் பூத்தும் காய்த்தும், பழமாகியும் காணப்படுகின்ற நிலையிலே குறித்த பேரீச்சம் பழங்களை அறுவடை செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.