ஊடகங்களில் தெரிவிக்கப்படுவதைப் போன்ற தன்னிடம் எதுவித சொத்துக்களும் கிடையாது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் அளித்த சாட்சியம் குறித்த தகவல்கள் தற்போது ஊடகங்களுக்கு கசிந்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளதாவது,
நான் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய போதிலும் அமைச்சின் கடமைகளும், பொறுப்புகளும் வேறு செயலாளர்களிடமும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் ரக்னா லங்கா மற்றும் அவண்ட் கார்ட் விவகாரங்களைக் கவனித்துக் கொண்டவர் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்னவாகும்.
அதற்கும் எனக்கும் தொடர்பில்லை. அதில் முறைகேடுகள் நடந்திருந்தால் நான் பொறுப்பில்லை.
யுத்த காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டமைக்காக புளொட், ஈ.பி.டி.பி. மற்றும் கருணா குழு போன்றவற்றுக்கு ஆயுதங்கள் வழங்கியிருந்தோம். ஆனால் அவற்றை திரும்பப் பெற முடியாது போனது.
நான் ஒரு கீர்த்தி மிக்க ராணுவ அதிகாரி. எனது சேவைக்காலத்தில் பெற்ற அனைத்துப் பதக்கங்களும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் எனக்கு வழங்கப்பட்டவைதான் . நான் கடமை என்று வந்துவிட்டால் கட்சி பேதம் பார்ப்பதில்லை.
என்னிடம் பாரிய சொத்துக்கள் இருப்பதாகவும், பல இடங்களில் நான் சொத்துக்களை வாங்கிப் போட்டிருப்பதாகவும் ஊடகங்களில் ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆனால் நான் 20005ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளர் பதவியைப் பொறுப்பெடுக்கும்போது அளித்த சொத்துப்பட்டியல் தவிர புதிதாக வேறெந்த சொத்தும் என்னிடம் இல்லை என்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
தன்னிடம் எதுவித சொத்துக்களும் இல்லை என்று மறுக்கும் இதே கோட்டாபய ராஜபக்ஷதான் தனது ஒரே புதல்வனான தமிந்த மனோஜ் ராஜபக்ஷவின் திருமண வைபவத்தின் போது சுமார் 100 மில்லியன் ரூபாவை செலவழித்து பாரிய விருந்து வைபவம் ஒன்றை நடத்தியிருந்தார்.
2011ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இந்தப் பாரிய விருந்து வைபவம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.