தமிழர்களின் பாரம்பரியத்தினையும் தமிழர் அடையாளங்களையும்,தமிழர் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கி வரும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்டிப்பதுடன், மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கில் காணி அபகரிப்பு, மற்றும் கடந்த கால செயற்பாடுகளை உற்று நோக்கையில் இத்திட்டத்தை வைத்து தமிழர் தாயக பிரதேசங்களில் சிங்களவர்களின் குடியேற்றங்களும் இடம்பெறுவதற்குறிய வாய்ப்புக்களும் அதிகம் உள்ளதால் இத்திட்டத்தினை எதிர்ப்பதுடன் நடைபெறவிருக்கும் வெகுசன போராட்டத்திற்க்கு ஆதரவழிப்பதாகவும் சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின்(சிறிரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் தெரிவித்துள்ளார்
மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதை தடுக்கும் முகமாக பாரிய ஓர் ஆர்ப்பாட்டத்தை மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை என்ற அமைப்பினர் 28.08.2018 அன்று நடாத்த உள்ளதனையடுத்து சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே தாம் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில், வடக்கில் அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களை மரபுவழியாக தமிழர்கள் வாழும் பூர்வீக நிலங்களில் அமைக்கப்படும் என்பது எமது கடந்தகால அரசியல் வரலாறு எமக்கு எடுத்துக்காட்டியுள்ளது, எனவே இதை கடுமையாக நாம் கண்டிக்கின்றோம் விசேடமாக மகாவலி ” L ” வலயம் என்ற திட்டமானது வடக்கில் 3இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட திட்டமாகும் 1984 ல் தமிழர்கள் ஏதிலிகளாக உள்நாட்டிற்குள் சென்ற போது அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்களை ஆக்கிரமிப்புக்குள்ளாகியதுடன் அவற்றில் பலவற்றை மகாவலி திட்டம்,வன திணைக்களத்திற்கு சொந்தமானது என பல்வேறு காரணங்களை காட்டி அரசு தன்வசப்படுத்தியுள்ளது எனவே எமது தாயக நிலங்களை மீட்டெடுப்பது நமது தலயாய கடமை
இதேவேளை இலங்கை திருநாட்டின் எதிர்கட்சி தலைவரும் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுத்தருவதற்காக போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு எதிராக இதுவரையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்? அப்படியென்றால் எதிர்கட்சி தலைவரின் சம்மததுடனா மகாவழி அபிவிருத்தி திட்டம் இடம்பெறுகிறது? என சிறிரெலோ கட்சியின் செயலாளர் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்
எனவே இனிமேலும் தாமதிக்காது நேரடியாக ஜனாதிபதியின் கவணத்திற்கு கொண்டு சென்று உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள் என குறிப்பிட்டதுடன் தாம் உடனடியாக ஜனாதிபதியுடன் இது தொடர்பாக கலந்தாலோசித்து சிறந்த ஒரு தீர்வை பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் உதயராசா அவர்கள் தெரிவித்துள்ளார்
எதிர்வரும் 28.08.2018 அன்று இடம்பெறவுள்ள மகாவலி எதிர்ப்பு போராட்டத்திற்க்கு கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு தமிழர்களின் ஒற்றுமையை நிலைநாட்டி இலங்கை அரசிற்கு அழுத்ததை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது