சுவிஸ் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி 7 இலட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் ஒருவரும், வடக்கின் பிரபல அரசியல்வாதி ஒருவரின் செயலாளரும், கரவெட்டி பிரதேசசபையின் உறுப்பினரான ஒருவரும் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வட்டுக்கேட்டைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்திய ஊடகவியலாளர் ஒருவரும், பெண் ஒருவரும் இணைந்து போலி மின்னஞ்சல் ஒன்றினை உருவாக்கி, அந்த மின்னஞ்சல் மூலம் முறைப்பாட்டாளரின் விபரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி இடம்பெற்ற உரையாடல்களின் போது, ஊடகவியலாளர் தனது தொலைபேசியினூடாக முறைப்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு பேசியதுடன், வங்கி கணக்கு இலக்கமொன்றினையும் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு வழங்கப்பட்ட கணக்கு இலக்கத்திற்கு முறைப்பாட்டாளரினால் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
பணம் வைப்பிலிடப்பட்ட பின்னர் தொடர்புகள் அற்ற நிலையில் இருந்த வேளையில் முறைப்பாட்டாளர் இம்மாதம் 09 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உரையாடிய தொலைபேசி இலக்கத்தினை கொடுத்து முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார், அந்த தொலைபேசி இலக்கம் யாழ்ப்பாண ஊடகவியலாளரின் இலக்கமென்றும், அவருடைய விபரங்களைப் பெற்றுக்கொண்டதுடன், வங்கி கணக்கு இலக்கம் தென்னிலங்கை அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் செயலாளரும் கரவெட்டி பிரதேசசபையின் உறுப்பினர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலுக்கு அமைவாக நேற்று இரவு ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் செயலாளரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.