மட்டக்களப்பு, ஏறாவூர் எல்லை நகர் வீதிப் புகையிரதக் கடவையில் வாகனங்களைப் பரிசோதிப்பதில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர், இளைஞர்கள் குழுவொன்று பயணித்த மோட்டார் சைக்கிள் மோதிக் கை முறிந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ரீ.ஏ. சுதத் என்பவரே சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மூன்று இளைஞர்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது;
சம்பவ தினத்தன்று, வழமையான வாகன ரோந்து நடவடிக்கையில் போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது குறித்த மூன்று இளைஞர்களும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
இதனை அவதானித்த பொலிஸ் அதிகாரி, குறிப்பிட்ட அந்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை செய்த போது அவர்கள் பதற்றப்பட்டு பொலிஸ் அதிகாரி மீது மோதி மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.
இவ்வேளையிலேயே அந்த அதிகாரியின் கை முறிந்ததாகவும் குறித்த இளைஞர்கள் மூவரையும் கைதுசெய்துள்ளனர்.
படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி, உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதேவேளை, சாரதி அனுமதிப்பத்திரம், மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் மற்றும் தலைக்கவசம் இன்றிப் பயணத்தி குற்றச்சாட்டில் ஐயங்கேணிக் கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது.