வர்த்தக சங்கத்தின் நடவடிக்கையினால் ஸ்தம்பிதம் அடைந்தது வவுனியா
வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று (05.08) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினரால் வியாபார நிலையங்களுக்கு துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதன் பிரதிபலிப்பாக இன்றையதினம் வவுனியா நகரிலுள்ள 95 வீதமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்தனர்.
மூடப்படாத வர்த்தக நிலையங்களுக்கு வர்த்தக சங்க உறுப்பினர்கள் விஜயம் மேற்கொண்டு வர்த்தக நிலையத்தினை மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இந் நிலையில் இன்றையதினம் காலை 10.00 மணியளவில் உதவித் தொழில் ஆணையாளர் தலைமையில் வர்த்தக நிலையங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட குழுவினர் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாம நிதி செலுத்தப்படுகின்றதா? என பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை ஒரு சில வர்த்தக நிலையங்கள் வழமை போல் இயங்கியமை பலரின் மத்தியிலும் விமர்சனங்களை உண்டு பன்னியுள்ளதுடன் வர்த்தகர்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவது போல் இருப்பதாக பலரும் கருத்துக்களை பகிர்வதுடன் பொதுமக்களும் இனிவரும் நாட்களில் ஒற்றுமையை குழப்பும் நபர்களை இனம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர்
மேலும் மருந்தகங்கள்,உணவகங்கள்,காய்கறி விற்பனை நிலையங்கள் போன்ற வர்த்தக நிலையங்களுக்கு விதிவிலக்காக பூட்ட வேண்டிய தேவை ஏற்படாதென்பதும் குறிப்பிடத்தக்கது