பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இவர், காய்கறிகள் இறக்குமதி தொடர்பில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விளக்கமளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் – இலங்கை வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சிமெண்ட் மற்றும் மருந்தாக்கியல் தொழில்களை முதலீடு செய்வது இலங்கைக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் இருந்து பெரும்பாலான மாணவர்கள் நவீன கல்வி கற்க இந்தியா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு செல்கின்றனர்.
இதேவேளை, மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் கல்வி கற்க பாகிஸ்தானிற்கும் செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டு அரிசியின் தேவை இலங்கையில் அதிகம் என்றும் இலங்கை தேயிலை பாகிஸ்தான் சந்தையில் அதிக பங்குகளை வகிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, இரு தரப்பு வர்த்தக விரிவாக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது என பாகிஸ்தான் – இலங்கை வர்த்தக சம்மேளனத் தலைவர் அஸ்லம் பஹாலி குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை அதிகரிக்கவே அமைச்சர் வருகை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள மூலிகை மற்றும் இஸ்லாமிய பொருட்கள் தொடர்பில் இலங்கையில் அதிக தேவை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CPEC மெகா திட்டம் மூலம் இலங்கையின் தயாரிப்புகளை ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் வழங்க அனுமதிக்க முடியும் என பாகிஸ்தான் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.