முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேவிபுரம், விக்கி குடியிருப்பில் நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கோஷ்டியினர், நேற்று வியாழக்கிழமை அதிகாலை கத்திமுனையில் வீடொன்றைக் கொள்ளையிட்டுள்ளனர்.
வீட்டின் மின்னிணைப்பை துண்டித்து விட்டு வீட்டிலிருந்தவர்களை கத்திமுனையில் அச்சுறுத்திய அந்தக் கோஷ்டியினர்,கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 15 பவுண் நகைகளையும் 65,000 ரூபாய் பணத்தினையும் இவர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து மற்றுமொரு வீட்டில் நுழைந்த அந்தக் கோஷ்டியினர், அவ் வீட்டில் எதுவுமே கிடைக்காத நிலையில் அவர்களிடமிருந்த அலைபேசியைப் பறித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அறிந்து அப்பகுதிக்கு வந்த புதுக்குடியிருப்புப் பொலிஸார், கொள்ளையிட்ட கோஷ்டியினரது உடையையும் அங்கு சிதறிக் கிடந்த சிறிய தொகைப் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்தி வரும் புதுக்குடியிருப்புப் பொலிஸார், மேலதிக விசாரணையில் மோப்ப நாய்களையும் ஈடுபடுத்தி வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.