புதுவருட தினத்தை முன்னிட்டு இலங்கையின் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 13, 14ம் திகதிகளில் சிறைக்கைதிகளை முன்னிட்டு இந்த விசேட சலுகைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் கடந்த 13 மற்றும் 14ம் திகதிகளில் காலை உணவுக்கு பாற்சோறு வழங்கப்பட்டுள்ளது.
பொதுவான நாட்களில் வெறும் சோறும் தேங்காய்ச் சம்பலும் மட்டுமே சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படுவதுண்டு.
அத்துடன் 14ம் திகதி மத்தியானம் விசேடமான முறையில் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் விசேட உணவு என்ற பெயரில் வழமையான உணவில் மஞ்சள் நிறம் சேர்த்ததைத் தவிர வேறெந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று கைதிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கொழும்பு சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு வீடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புதுவருட உணவுகள் மற்றும் இனிப்புகளில் சிறைச்சாலை அதிகாரிகளும் பங்கு கேட்டிருப்பதாகவும் அறியக் கிடைத்துள்ளது.