வடமாகாண சபையின் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி, அதன் உறுப்பினர்களால் வடமாகாண முதலமைச்சர், சீ.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதில் 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2013ம் ஆண்டு 9ம் மாதம் 21ம் திகதி வடமாகாண சபைக்கான தேர்தல் நிறைவடைந்து, அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் மாகாண சபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டனர்.
தற்போது மாகாண சபைக்கு இரண்டரை ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இந்த நிலையில் எதிர்வரும் இரண்டரை ஆண்டுகளுக்கு, தற்போதுள்ள அமைச்சர்களை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிப்பதுடன், அவைத்தலைவர் மற்றும் பிரதி அவைத் தலைவர் பதவிகளிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த மனுவை, ஆறுபேர் கொண்ட குழுவொன்று வட மாகாண முதலமைச்சரிடம் கையளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் எதிர்வரும் 1ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்ல உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுடன், இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே சிவஞானத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த விடயம் தொடர்பில் தமக்கு உத்தியோக பூர்வமாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.