40 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறி ஒப்பந்த பத்திரத்தை விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், 80 பில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
சிறிய வட்டிக்கு இது வழங்கப்படவில்லை எனவும் 14 வருடங்களுக்கு 14.23 வீத வருடாந்த வட்டியில் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வீரவன்ஸ இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த திறைசேரி முறியுடன் தொடர்புடைய கொள்வனவாளர் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கிடைத்துள்ள தகவல்களின் படி மத்திய வங்கியின் ஆளுநரின் மருமகனுக்கு சொந்தமான நிறுவனம் இதன் பின்னணியில் இருக்கின்றது.
இலங்கையை சீனாவின் காலனியாக மாற்ற போகின்றனர். சீனாவே இலங்கையின் பொருளாதார கொலையாளி என கடந்த காலங்களில் கூறி வந்த பிரதமர். சீனாவுக்கு சென்று உதவிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் ராஜபக்ச காலத்தில் மேற்கொண்ட அபிவிருத்தி வழிமுறைகள் சரியானது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
சீன எதிர்ப்பை கட்டியெழுப்பி ஆட்சிக்கு வந்த போதிலும் தமது எஜமானர்கள் எதனையும் கொடுக்காத நிலையில், சீனாவிடம் மண்டியிட்டு பிச்சை எடுக்க நேரிட்டுள்ளது.
அரசாங்கத்திடம் பொருளாதாரம் தொடர்பில் எவ்வித வழிமுறை ஞானமும் இல்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதி ஜீ.7 நாடுகளின் மாநாட்டுக்கு சென்று வந்த பின்னர், பொருளாதார திட்டங்களை முன்வைப்பதாக கூறி வருகின்றனர் எனவும் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.