முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் அத்துமீறி தொழிலாளர் குடியிருப்பை அமைத்து சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் குறித்துத் தகவல் திரட்டச் சென்ற கிராம சேவகர்கள் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை, அவர்களை இராணுவத்தினரும் தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குத்தொடுவாய் வடக்கில் ஒருவரின் காணியில் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் சிலருடன் அத்துமீறி நுழைந்து தொழிலாளர் குடியிருப்பை அமைத்து, அங்கிருந்து 25 படகுகளை வைத்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றி மாவட்ட அரச அதிபருக்கு அறிக்கை அளிப்பதற்காக கிராம சேவகரான எஸ்.யேசுரட்ணம், இ.தர்மசீலன் என்பவருடன் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு நேற்று பிற்பகல் சென்றுள்ளார்.
இவ்வாறு சென்ற கிராம சேவகர்களை அங்கிருந்தவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அத்துடன் இருவரையும் கடுமையாகத் தாக்கியும் உள்ளனர். இதனால் யேசுரட்ணம் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இந்த விடயம் குறித்துப் பொதுமக்களால் அந்த பகுதிக்குப் பொறுப்பான உதவி அரசாங்க அதிபருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடன் நடவடிக்கை எடுத்த அவர் இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டு அடையாள அட்டைகளை கிராம சேவகரிடமே வழங்குமாறும் அவர்களை விடுவிக்குமாறும் கூறியுள்ளார். அதன் பின்னரே இருவரும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பான்மை இனத்தவர்களின் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிராம சேவகரான யேசுரட்ணம் முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவின் எல்லையோரக் கிராமங்களில் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தென்னிலங்கை பெரும்பான்மை இனத்தவர்களின் இவ்வாறான அத்துமீறல்கள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
அத்துடன், இதற்கு கடற்படையினரும் இராணுவத்தினரும் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் வழங்கி வருகின்றனர் என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவின் எல்லையோரக் கிராமங்களில் இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்கள் நன்கு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. முன்னர் நாயாறு கிராமத்திலும் இவ்வாறு பெரும்பான்மை இனத்தவரின் அத்துமீறல்கள் இடம்பெற்று வந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் இந்த பகுதிக்கு சென்ற மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இவ்வாறு அத்துமீறி ஏற்படுத்தப்பட்ட சிங்களக் குடியிருப்புக்களை அகற்றுமாறு உத்தரவிட்டபோதும் இன்று வரை இந்தக் குடியிருப்புக்கள் அகற்றப்படவில்லை எனவும், மாறாக கடற்படை மற்றும் இராணுவத்தின் பாதுகாப்புடன் குடியேற்றங்களும் சட்டவிரோத மீன்பிடியும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது எனவும் பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.