மும்பை: ஐபிஎல் டி20 சீசன்-9 துவக்க விழா மும்பையில் நேற்று கோலாகலமாக நடந்தது. ஐபிஎல் டி20 சீசன்-9 கிரிக்கெட் தொடர் லீக் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இதை முன்னிட்டு, இத்தொடருக்கான வண்ணமயமான துவக்க விழா மும்பை நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா அரங்கில் நேற்று நடந்தது.
முதல் நிகழ்ச்சியாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசின் கலக்கல் நடனம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து, 8 அணிகளின் கேப்டன்களும் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சின் கேப்டன் ரோகித் ஷர்மா, வெற்றிக் கோப்பையை மேடைக்கு கொண்டு வந்தார். 8 அணி வீரர்களும் எம்சிசி நெறிமுறைகளை கடைபிடிக்க உறுதி மொழி ஏற்றனர்.
இதையடுத்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நடிகை கத்ரீனா கைப்பின் நடனம் நடந்தது. அவர் நடித்த திரைப்படங்களான தூம், பாங்க் பாங்க் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடி அசத்தினார்.
பின்னர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோவின் சாம்பியன் பாடலும், பீரங்கி போன்ற வண்டியில் யோ யோ ஹனி சிங்கின் பாடல் நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கிரிக்கெட் பேட், பேடுடன் ஆட்டம் போட்டு அசத்தினார்.
இறுதியாக, அமெரிக்க பாடகர் கிறிஸ் பிரவுனின் பாடல் நிகழ்ச்சியும், மேஜர் லேசரின் துள்ளல் இசை நடன நிகழ்ச்சியுடன் சுமார் 2 மணி நேர துவக்க விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததன. நிகழ்ச்சியில், அணிகளின் உரிமையாளர்கள், பிசிசிஐ நிர்வாகிகள், பாலிவுட் நட்சத்திரங்கள், வீரர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.