மைக்கேல் ஜாக்சன் சிலையை நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா சென்னை கல்லூரி வளாகம் ஒன்றில் திறந்து வைத்திருக்கிறார். தன்னுடைய அற்புதமான நடனத்தால் உலகில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டவர் மைக்கேல் ஜாக்சன்.
நடனத்திறமையால் ஒட்டுமொத்த உலகையும் கட்டிப் போட்ட, உலக இசை ரசிகர்களின் மனதை விட்டு மறையாத மைக்கேல் ஜாக்சனின் சிலை, 3.5 டொன் எடையில், 10 அடி உயரத்தில் 5.5 அடி அகலத்தில் அதிபிரமாண்டமாய் கருப்பு கிரானைட் கற்களில் காஞ்சிபுரத்து கைவினைக் கலைஞர்களின் முயற்சியில் 45 நாட்களில் செதுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மைக்கேல் ஜாக்சன் இறந்து போனார். வருடங்கள் கடந்தும் அவரது மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் ஒன்றில், மைக்கேல் ஜாக்சன் சிலையை ‘நடனப்புயல்’ பிரபுதேவா திறந்து வைத்திருக்கிறார். தலையில் தொப்பியுடன் மார்பில் கை வைத்தபடி, ஒருவிரலை நீட்டிக் காட்டுவது போல மைக்கேல் ஜாக்சன் சிலையை வடிவமைத்துள்ளனர்.
சிலையைத் திறந்து வைத்தபின் பிரபுதேவாவும் அதேபோன்று போஸ் கொடுத்தார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என பிரபுதேவா அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.