இரவு நேரத்தில் வீடொன்றிற்குள் புகுந்து வாளால் வெட்டியும் பொல்லால் தாக்கி காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரையும் இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.
நேற்று மன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அம்பாறை அட்டாளைச்சேனை கோணாவத்தை ஓ.பி.ஏ வீதியால் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியை வீதியில் நின்ற சிலர் நிறுத்தி சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முச்சக்கர வண்டியின் குறித்த உரிமையாளரின் வீட்டருகே இச்சண்டை ஏற்பட்டதால் அவரின் தாய், தந்தை இருவரும் சம்ப இடத்திற்கு அருகில் இருந்ததால் அவர்கள் வந்து ஏன் இப்படி வாக்குவாதம் செய்கின்றீர்கள் எனக் கேட்டுள்ளனர்.
அதன் பின்னர் ஒருதரப்பினர் மற்ற தரப்பினரது வீட்டுக்குள் சென்று வாளாலும் பொல்லாலும் தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்து காசிப்பு லெவ்வை கையும் வஹாப் (வீட்டுக்காரர்) அவரது மனைவி அலியார் ஆஸியா உம்மா ஆகியோர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இத்தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் அவரது தரப்பினரையும் வீட்டுக்காரர்களுக்கு சார்பானவர்கள் தாக்கியதாகவும் அதனால் புஹாரி மசூர், புஹாரி நௌஷாத் ஆகிய இருவரும்; வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
ஒரு தரப்பிலிருந்து இருவரும் மற்ற தரப்பில் இருந்த ஒருவருமாக மூன்று பேர் நேற்று (07) மன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு நீதிபதியால் வழங்கப்பட்டது.