பொருத்து வீடுகளை அமைப்பது தொடர்பில் வடக்கு மாகாணத்தில் கடும் எதிர்ப்பு எழுந்திருந்த நிலையில் எப்பாடுபட்டாவது பொருத்து வீடுகளை அமைத்து விட வேண்டும் என ஒரு தரப்பும்; இல்லையில்லை பொருத்து வீடுகளை அமைக்க விட்டு விடக்கூடாது என மறுதரப்புமாக சர்ச்சைப்பட்டிருந்த வேளையில், வீடுகளைப் பெற இருந்த குடும்பங்கள் நாங்கள் இருப்பதற்கு வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறோம்.
இவர்கள் தர்க்கப்படுகிறார்கள் என்ற மனநிலையில் இருந்தனர். நிலைமை இதுவாக இருந்தபோது, பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்தை இடை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவானது பொருத்து வீடமைப்பின் மூலம் ஏகப்பட்ட பணம் மோசடி செய்யப்படும் என்ற குற்றச்சாட்டுக்கு முடிவு கட்டியுள்ளது.
அதாவது அப்போது றோட்டில் அடித்தார்கள். இப் போது வீட்டில் அடிக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச் சாட்டுக்கு முடிவு கட்டப்பட்டமை நல்லாட்சியில் எடுக்கப்பட்ட சிறந்த தீர்மானம் எனலாம்.
அதேவேளை பொருத்து வீடுகளுக்கு ஜனாதிபதி தடை விதிப்பு என்று கூறும் போது, ஐயா! எங்களுக்குக் கிடைக்க இருந்த வீடு கிடையாதா? கைக்குக் கிட்டியும் வாய்க்குக் கிட்டாமல் போய் விட்டதே! என்று ஏங்குகின்ற ஏழை மக்களுக்கு ஒரு நல்ல உத்தரவாதத்தை வழங்குவதும் ஜனாதிபதியின் தார்மீகக் கடமையாக இருக்கும்.
பொருத்து வீட்டுத் திட்டத்துக்குப் பதிலாக சீமெந்தினால் கட்டிடம் அமைக்கப்பட்டு ஓடிட்ட வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்ற அறிவித்தல் வெளிவருமாக இருந்தால் மக்கள் திருப்தியடைவர்.
மாறாக பொருத்து வீட்டுக்குத் தடை என்பது மட்டுமே தகவலாக இருக்குமானால் நிரந்தர வீடு கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை, பொருத்து வீட்டையாவது அமைத்துத் தாருங்கள் என்று கேட்பது வீடற்றவர்க ளைப் பொறுத்தவரை நூறுவீதம் நியாயமானதாகும்.
எனவே இல்லாதவர்களை வருத்தி அவர்களை எதற்கும் இணங்க வைப்பதென்பது தர்மமாகாது.
ஆனால் வீடற்றவர்களுக்கு அவர்களின் சமய, பண்பாட்டு அம்சங்களுக்கு அமைவாக வீடுகளை அமைத்துக் கொடுப்பதே நீதியாகும் என்ற அடிப்படையில் வீடற்றவர்களுக்கு நிரந்தரமான கல் வீட்டை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை ஜனாதிபதி அவர்கள் அமுல்படுத்த வேண்டும்.
அதேநேரம் பொருத்து வீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு வீடு வழங்கக்கூடாது என சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் கோபம் கொள்ளாமல், கட்டிக்கொடுக்கின்ற வீடுகளை மக்கள் விரும்புவது போல கட்டிக் கொடுப்பதே நல்லது என்று நினைத்து குறித்த 65ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.
இவ்வாறு செய்வது மக்களிடையே ஒரு திருப்தியான மனநிலையைத் தோற்றுவிப்பதுடன் திருப்தியான சேவை வழங்கப்பட்டது என்ற மனநிறைவும் ஏற்படும் என்பதால் சீமெந்தினாலான நிரந்தர வீடுகளை அமைக்க உடனடியாக ஆவன செய்வதே பொருத்துடையதாகும்.