இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மது விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மது விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதாக முதல் அமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.
இந்தியாவில் குஜராத், நாகலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்களை அடுத்து 4 வது மாநிலமாக மது விற்பனைக்கு பீகார் தடையை விதித்து உள்ளது. ஓட்டல்கள், பார்கள் இனி மது விற்பனை செய்யக் கூடாது, இனி யாருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.
ராணுவ கென்டீன்கள் மது விற்பனையை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
அம்மாநில முதல் அமைச்சராக நிதிஷ் குமார் பொறுப்பேற்றார். முன்னதாக நிதிஷ்குமார், ஆட்சிக்கு வந்தால் மது விற்பனைக்கு தடை விதிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்படி பீகார் மாநிலத்தில் மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வந்து உள்ளார்.
இது தொடர்பான சட்ட திருத்தம் பீகார் மாநில சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. தற்போது மது விற்பனைக்கு தடை செய்து இந்தியாவிலேயே மது விற்பனைக்கு தடை செய்த 4வது மாநிலம் என்ற பெருமையை பீகார் தனதாக்கி உள்ளது.