தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு நாட்டில் மீண்டும் தலைத்தூக்கும் என்பது பொய்யான விடயம் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தில் அண்மையில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 12 ஆயிரம் பேரும் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். பலர் அவயவங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், உறவினர்களைக் கூட கவனிக்க முடியாத நிலையில் வாழ்கின்றனர்.
இந்தநிலையில், அவர்கள் மீண்டும் போராட்டத்திற்குள் வருவார்கள் என எண்ணுவது முட்டாள்தனமான விடயம் என வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.
இதேவேளை. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பாரிய தலைமைத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பாக உள்ளது. எனவே, மீண்டும் அதற்கு முறையான தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய தரப்பினர் உலகளவில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.