நடிகை பிரியங்கா சோப்ரா 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்புக்காக அவர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.
இந்த நிலையில் 33 வயது நடிகையான பிரியங்கா சோப்ரா பற்றி அவரது முன்னாள் முகாமையாளர், பிரகாஷ் ஜாஜூ பரபரப்பு தகவலை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, பிரியங்கா சோப்ரா இப்போது மிகவும் பலமானவராக இருக்கிறார். ஆனால், அவருக்கு நேர்ந்த இக்கட்டான நாட்களில் அவர் 3 முறை தற்கொலைக்கு முயன்றார்.
பிரியங்கா சோப்ராவின் முன்னாள் ஆண் நண்பர் அசீம் மெர்சண்ட்டின் தாய் இறந்ததை தொடர்ந்து, 2002 ஆம் ஆண்டில் ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தார். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, நான் தான் அவரை தடுத்து நிறுத்தினேன் என அவர் கூறினார்.
இந்த பரபரப்பு தகவலை வெளியிட்ட பிரகாஷ் ஜாஜூ, நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை முகாமையாளராக இருந்தவர்.
இவர் தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை வழங்கவில்லை என்று கூறி பிரியங்கா சோப்ரா மீது வழக்கு தொடர்ந்தார். இந்த தகராறு முற்றியதால், பிரியங்கா சோப்ராவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பிரகாஷ் ஜாஜூ 67 நாட்கள் சிறை வாசம் அனுபவிக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிரகாஷ் ஜாஜூக்கு பிரியங்கா சோப்ராவின் தாய் மது கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது மகள் தற்கொலைக்கு முயன்றதாக கூறும் பிரகாஷ் ஜாஜூ ஒரு பொய்யர். சிறையில் இருந்தபோது அவரது தாய், தந்தை எனது மகளின் காலில் விழுந்து மன்றாடியதை நினைத்து பார்க்க வேண்டும்’ என்றார்.