குறித்த பனிச்சை மரத்திற்கு பக்கத்திலே உள்ள வயல் நிலத்தை தனிநபர் ஒருவார் விலைக்கு வாங்கிய நிலையில் குறித்த நபர் பனிச்சை மரத்தின் கொப்புகளை வெட்டிய காரணத்தால் கடந்த 5 மாதத்திற்கு முன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகம் குறித்த நபருக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தது.
குறித்த வழக்கு தொடர்பாக வீதியில் இருந்து 15 மீற்றர் அகல நிலத்தில் ஆலயத்தின் பயன்பாட்டிற்கு உட்படுத்தலாம் என்று கடந்த முதலாம் திகதி நீதிமன்றம் தீர்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை இரவோடு இரவாக தனது வேலியை பனிச்சை மரத்துக்கு அருகில் அடைத்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை இதை அறிந்து அங்கு கூடிய ஆலய பூசாரியாரும் மக்களும் பனிச்சை மரத்திற்கு பாதிப்பு வரும் என்று அஞ்சி மரத்தை பாதுகாக்கும் நோக்கில் அவ்விடத்தை விட்டு விலக மாட்டோம் என்று மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார்கள்.
சம்பவத்தை அறிந்து அங்கு விரைந்த முள்ளியவளை பொலிஸார் ஆலய நிர்வாகத்தை பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு செய்யும்படி வேண்டினார்கள்.
எனினும் சட்டத்தை மதிக்காத தமது எதிர் நபர் மீது தாம் முறைப்பாடு செய்ய விரும்பவில்லை என்று மக்கள் மறுத்துள்ளனர்.
நிலைமை மிகமோசமாவதை அறிந்த மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சமரசம் செய்ய முற்பட்டார்கள். அதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை.
அரசாங்க அதிபர் தமக்கு மரத்தை பாதுகாக்க வாக்குறுதி தர வேண்டும் என்று கோயில் மேற்படி நிர்வாகமும் மக்களும் கோரிக்கை விடுத்தனர்
மாவட்ட அரசாங்க அதிபர் கூட்டம் ஒன்றில் கலந்திருந்தமையால் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் ஆலய நிர்வாகசபை உறுப்பினர்கள் அரசாங்க அதிபரை நேரில் சென்று சந்தித்தனர்.
இது தொடர்பாக அரசாங்க அதிபர் பதில் அளிக்கையில் பனிச்சை மரத்தைப் பாதுகாப்பதற்கு உடனடியாக கட்டுமானங்களை தொடரும்படி கூறினார்.
எனினும் நாளை பிற்பகல் 3.00 மணிவரை எதிர் நபரின் வேலியை எதுவும் செய்யக்கூடாது என்று பணித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் பதில் நீதவான் பரஞ்சோதி அவர்களும் வருகை தந்து நிலைமையை ஆராய்ந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.