அண்மையில் வெளியாகிய 2015ம் ஆண்டுக்கான G.C.E சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்டங்கள் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.
இதில் யாழ். மாவட்டம் 21வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. இது இதுவரை நிகழாத துர்ப்பாக்கியம் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
போர்க் காலங்களிலும், அதற்கு முன்னரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வித் தரம் உயர்ந்தே காணப்பட்டது. இதற்கான சரியான அளவு கருவியாகG.C.E சாதாரண தரப் பரீட்சையை மட்டுமே கொள்ள முடியும். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையையோ, G.C.E உயர்தரப் பரீட்சையையோ கொள்ளமுடியாது.
G.C.E உயர்தரப் பரீட்சையின் சித்திக்குப் பல காரணிகள் உள்ளன. ஆனால் G.C.Eசாதாரண தரச் சித்திக்குத் தனியே பாடசாலைக் கல்வியை மட்டுமே சொல்ல முடியும்.
G.C.E உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றோர் வரிசையில், யாழ்ப்பாண மாவட்டம்21வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் தரும் விடயமாகும்.
இதைவிட முதல் ஒன்பது இடங்களுக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்கள் எவையும் இடம்பெறவில்லை.
மன்னார் மாவட்டம் 10ம் இடத்திலும், அம்பாறை 13ம் இடத்திலும், வவுனியா 16ம் இடத்திலும், மட்டக்களப்பு 17ம் இடத்திலும், திருகோணமலை 23ம் இடத்திலும், முல்லைத்தீவு 24ம் இடத்திலும், கிளிநொச்சி 25ம் இடத்திலும் உள்ளன.
இந்த தரவரிசையானது எப்போதும் நிகழாத ஒன்றாகவே காணப்படுகின்றது.
தமிழர் பிரதேசங்களில் இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், மாகாண மட்டத்தில் உள்ள பல குறைபாடுகள் அதற்கு முழுக்காரணமாக அமைகின்றன.
குறிப்பாக முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்கள்,,முறையற்ற அதிகாரிகளின் இடமாற்றங்கள், அரசியல் தலையீடுகள், கல்வியில் அநாவசியமான வெளியாரின் தலையீடுகளும் அடங்குகின்றன.