சமீபத்தில் நோயை குணப்படுத்த பூசாரி ஒருவரிடம் சென்ற பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களான குறித்த பூசாரி மற்றும் அவரின் உதவியாளர்கள் மூன்று பேர் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனுவை அனுராதபுர பிரதான நீதவான் இன்று நிராகரித்துள்ளார்.
அதனடிப்படையில் , சந்தேகநபர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 13 ம் திகதி அனுராதபுரம் நெல்லிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய குறித்த பெண் தனது கணவனுடன் குறித்த பூசாரியிடம் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக கடுகெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள பூசாரியின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கு நோயை குணப்படுத்துவதற்கான பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து குறித்த பெண்ணிற்கு எலுமிச்சை ஒன்றை விழுங்க வைத்துள்ள நிலையில் , அந்த பெண் மயக்கமுற்றுள்ளார்.
அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் உயிரிழந்திருந்தார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நெல்லிக்குளம் மற்றும் நீராவிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.