அமைச்சர் பாட்டாளி சம்பிக்கவின் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு பெற்று கொள்ளப்பட்ட தொலைபேசி இணைப்பு தொடர்பான அறிக்கையை பெற்றுகொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்சூரிய இன்று காவற்துறைக்கு உத்தரவிட்டடுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இராஜகிரிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவிடம் 7 மணி நேர வாக்குமூலத்தை பெற்று கொண்டதுடன், அவரின் கையடக்க தொலைபேசியின் அழைப்பு தொடர்பான அறிக்கையையும் பெற்று கொண்டதாக இதன் போது நீதிமன்றத்தில் வெலிக்கடை காவற்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது அந்த இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காணொளியின் பதிவுகள் சோதனை செய்த போதும் அதில் சில காட்சிகள் அழிந்துள்ளதாக காவற்துறை, நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.