முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிலாய் பிரதேசத்தில் பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என, வடமாகாணத்திற்கான புதிய ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடமாகாண விசாகப்பூரணை தின ஏற்பாடுகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றது.
இதன்போது, கொக்கிளாயில் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்படுவதாக கூறப்படுகின்றமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பௌத்தர்களே இல்லாத நிலையில், அங்கு எதற்காக இந்த விகாரை அமைக்கப்படுகிறது என்று அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய ஆளுனர், குறித்த விகாரைக் குறித்து தமக்கு தகவல் கிடைக்கவில்லை என்றும், ஆராய்ந்து இது தொடர்பில் பதில் வழங்குவதாவும் கூறி, சந்திப்பில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.