அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் யசோதர என்ற மாணவன் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
மேற்படி, ஊடகவியலாளர் சந்திப்பானது, பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரான லகிருவின் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் அனோமா கருத்து தெரிவிக்கையில்,
எனது மகனுக்கு தற்போது 9 வயதாகின்றது ஆனாலும், அவன் இரண்டு வருட படிப்பை இழந்து விட்டு நிற்கின்றான்.
அவன் நல்ல திறமைசாலி. கல்வியில் கெட்டிக்காரன். அதற்கான சான்றுகளையும் நான் உங்களிடம் வழங்கியுள்ளேன். ஆனால், இவ்வளவு திறமைகள் இருந்தும் எனது மகன் பாடசாலைகளிலிருந்து புறக்கணிக்கப்படுகின்றான்.
காரணம் அவனுக்கு குறும் பார்வை குறைவு மற்றும் காது சற்று குறைவாக கேட்கா தன்மையும் காணப்படுகின்றது. இதன் காரணமாக இவனுக்கு ஏற்றாற்போல் எமது பாடசாலைகளில் கல்வி கற்பிக்க முடியாது என பாடசாலை தலைமைகள் தெரிவிக்கின்றன.
மேலும் தற்போது இரண்டு வருடமாக பாடசாலை கல்வி இன்றி காணப்படுகின்றான். ஆனாலும் கல்வியில் ஆர்வம் குறையவில்லை. யசோதர இறுதியாக கல்வி கற்ற பிரபலமான பாடசாலை ஒன்றில் அவனை அடித்து துன்புறுத்தி பாடசாலை சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துமாறும் பணித்துள்ளனர்.
தற்போது எனது மகன் சந்தித்திருக்கும் இந்த நிலைமைக்கு அரசாங்கம் ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையேல் என தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எச்.ஐ.வி வதந்தியின் காரணமாக மேலுமொரு மாணவன் பாடசாலையிலிருந்து புறக்கணிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலைமைகள் நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்றமையால் உரிய அதிகாரிகள் இதற்கான சரியான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது பல பெற்றோர்களின் அவாவாகும்.