இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஈழ அகதிகள் இலங்கைக்கு விரைவில் நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
கே. தயாபரராஜாவும் அவரது மனைவி உதயகலாவும் இலங்கையில் பாரிய அளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ராமநாதபுரம் – மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமது மனைவி உதயகலா மற்றும் பிள்ளைகளை விடுவிக்குமாறு கோரி, தயாபரராஜா கடந்த 17ஆம் திகதி முதல் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அவர்களை விடுவிப்பதாக தமிழக அரசாங்கம் அறிவித்த நிலையில், அவரது போராட்டமும் கைவிடப்பட்டது.
எவ்வாறாயினும், நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் இலங்கைக்கே நாடுகடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக, தமிழக காவற்துறையின் தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.