மட்டு வாகரை கட்டுமுறிவுகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பல தேவைகளை நிவர்த்தி செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9.30 மணியளவில் ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “எப்போது ஆசானைத் தருவீர்கள், நல்லாட்சி அரசாங்கமே நலமாக வாழ உடன் தீர்வு தாருங்கள், எங்கள் கனவை நனவாக்க நல்ல அரசாங்கமே நல்ல ஆசானை தா, வாய் பேச்சு வேண்டாம் நடைமுறைப்படுத்து, தீர்வைப் பெற்றுத் தாருங்கள், கல்வியே வாழ்வின் ஒளி, பாடசாலை வரலாற்றில் ஆங்கில பாடம் கற்பிக்க வேண்டும், எமது உரிமையைப் பெற்றுத் தாருங்கள், காலத்தை வீணாக்காதே உடன் தீர்வு வழங்கவும், மிக விரைவில் நியமனம் பெற்றுத் தர வேண்டும், எங்களது கல்வியைத் தாருங்கள்” என பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் பாடசாலையானது கதிரவெளி பிரதான வீதியில் இருந்து 19 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மிகவும் கஷ்டப்பட்ட பாடசாலையாகவும், தரம் 11 வரை வகுப்பறைகள் காணப்படுவதோடு, சுமார் 170 மாணவர்கள் வரை கல்வி கற்கின்றனர். அத்தோடு இங்கு 06 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பிக்கின்றனர்.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் கல்குடா கல்வி வலயத்தின் வாகரைக் கோட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக அண்மையில் வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஷ்ணராஜா தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
2009ஆம் ஆண்டு தரம் 10, 11 வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் 14 ஆசிரியர்களை கொண்டு காணப்பட்ட பாடசாலையில் ஆசிரியர் இடமாற்றம் பெற்றுச் சென்றமையால் தற்போது அதிபர் உட்பட 07 பேரைக் கொண்டு காணப்படுவதால் எமது கல்வி நிலை பாதிக்கப்படுவதாக மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இங்கு தமிழ், கணிதம், ஆங்கிலம், வரலாறு, சமயம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் இல்லை. இதனால் எமது கல்வி நிலை பாதிக்கப்படுகின்றது. எனவே எமது பாடசாலைக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமித்து எங்களது கல்வி அறிவை கூட்டுமாறு மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஷ்ணராஜா கலந்து கொண்டு, ஒரு வாரத்திற்குள் மூன்று ஆசிரியர்களை வழங்குவதுடன், மேலும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த பின்னர் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் நியமனங்களின் அடிப்படையில் கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்னுரிமை வழங்கப்படுமென கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஷ்ணராஜா உறுதியளித்தார்.
இதன்போது கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் மகஜர் ஒன்று பாராளுமன்ற உறுப்பினர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டது.
கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கோட்டங்களில் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில் ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரை மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு எதிர்ப்பு தெரிவித்த பின்பே அதிபர், ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.