மாறுபட்ட முறையில் செயல்படும் சுனி மற்றும் ஷியா முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதன் மூலமே, ஈவிரக்கம் அற்ற வகையில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த முடியும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பாங் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என ஈராக்கிய அரசாங்கத்தை அவர் கோரியுள்ளார். பாக்தாத்தில் பாங் கீ மூனும் ஈராக்கிய பிரதமர் ஹெயிடர் அல் அபாடியும் இணைந்து நடாத்திய உடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.
கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்க தலைமையிலான படையணியினர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது, ஷியா தலைமையிலான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இதேவேளை, ஈராக்கிய தலைநகர் பாக்தாத்திற்கு, உலக வங்கி மற்றும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி ஆகியனவற்றின் தலைவருமான அகமட் மொகமட் அலி, பாங் கீ மூனுடன் சென்றுள்ளார்.
இவர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் சென்றிருப்பது அபூர்வமாக நிகழ்வென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் இருவரும், வட குர்திஷ் நகரான எர்பிலுக்கும் இன்று செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உலக வங்கியின் தலைவர், ஈராக்கிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். அரசாங்கம் தனியார் துறையினரின் செயல்பாடுகளுக்கு உத்வேகத்தை அளிக்க வேண்டும் என தெரிவித்ததுடன், பொருளாதார கொள்கையினை சீர்திருத்த கொள்கையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டின் ஊழல் மற்றும் வீண் விரயத்தை தவிர்க்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.