விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த பின்னர் வவுனியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து கிராமங்களில் இராணுவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டனர். அதன் பின்னர் இவர்களுக்கு குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஆரம்பத்தில் செய்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வவுனியா அரச அதிகாரிகள் மற்றும் தமிழ் மக்கள் தங்கள் மீது பாரபட்சம் காட்டுவதாக குறித்த போகஸ்வெவ பிரதேச பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.
தங்கள் பிரதேசத்துக்கான குடிநீர் வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளும் செப்பனிப்படவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சென்றாலும் தங்கள் அவமதிக்கப்படுவதாகவும், பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் இப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக பொதுபல சேனாவுக்கான ஆதரவு அதிகரித்துள்ளதுடன், கடந்த வாரம் இப்பகுதிக்கு பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.