மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று அச்சிறுமிக்கு பியர் மற்றும் சிறுநீரை பருக செய்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் பெரும் வேட்டையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். திக்வெல்ல பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு அப்பிரதேசத்திலுள்ள 15 வயதான சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி இளைஞனால் தடுத்து வைக்கப்பட்டிருந்து குறித்த சிறுமி சூட்சுமமான முறையில் இளைஞனின் பிடியிலிருந்து தப்பிச் சென்று அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தனக்கு நேர்ந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த இளைஞன் போத்தலொன்றில் சிறுநீரை கழித்து அதனை பருகுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும் அவ்வாறு அதனை தான் பருக மறுத்த சந்தர்ப்பங்களில் பொல்லைக் கொண்டு தாக்கியதாகவும் பின்னர் தனது விருப்பத்துக்கு மாறாக தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்திருந்தார்.
சிறுமியினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றிருந்த போதிலும் சந்தேக நபர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர் சிறுமி மீது தாக்குதல் நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட பொல்லினையும் பியர் டின் ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.